தேனி அருகே உள்ள வீரபாண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு நிர்வாகிகளுக்கான மூன்றுநாள் சிறப்புப் பயிலரங்கம் நடைபெற்றது. இதில் மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். பயிலரங்கத்தின் மூன்றாம் நாளான நேற்று அக்கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. உள்ளாட்சித் தேர்தலில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் வாக்கு வாரியாக பிரிக்கப்பட்டுத் தேர்தலை நடத்த வேண்டும். ஆனால் உள்ளாட்சித்துறை அமைச்சரோ அது தேவையற்றது என்கிறார்.
இதனால் நீதிமன்றத்தில் யாரேனும் வழக்கு தொடர்ந்து தேர்தல் தடுப்பதற்கு வாய்ப்புகளை உருவாக்கும். அதற்கும் திமுக, அதன் தோழமை கட்சிகள் மீது தான் இந்த ஆட்சியாளர்கள் குற்றம் சுமத்துவார்கள் என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்கள் சந்திப்பு வெற்றிடம் என்ற ரஜினியின் அரசியல் பேச்சு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், நான் ரஜினியின் தீவிர ரசிகன் ஆனால் ரஜினியின் பேச்சு அரசியலில் எந்த ஒரு விளைவையும் ஏற்படுத்தாது. அரசியலில் வெற்றிடம் இருப்பதாக அனைவரும் கூறுகின்றனர்.
ஆனால் என்னைப் பொறுத்தவரையில் வெற்றிடம் என்பதே கிடையாது. ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார் ஆனால் இதுவரை வரவில்லை. அவர் வந்தவுடன் அனைவருக்கும் தெரியும். முதலமைச்சர், துணை முதலமைச்சர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணத்தில் மக்களுக்கு என்ன பயன் உள்ளது என்பதை அவர்கள் தான் கூறவேண்டும். எனக்குத்தெரிந்து இருவரின் வெளிநாட்டுப் பயணத்தில் எந்த ஒரு பலனும் இருப்பதாகத் தெரியவில்லை என்றார்.