தேனி மாவட்டம் தேவாரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம்(34). இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி(29) என்பவருடன் திருமணமாகி 12 ஆண்டுகள் முடிந்த நிலையில், 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக இந்த தம்பதியினர் கேரள மாநிலம் கூட்டாறு பகுதியில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் தங்கியிருந்து பணிபுரிந்துவருகின்றனர். இவர்களின் 2 மகன்களும் ராஜேஸ்வரியின் தந்தை வீட்டில் தங்கி பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், கேரளாவில் தங்கி பணிபுரிந்து வந்த சமயத்தில் மனைவியின் நடத்தையில் கணவருக்கு சந்தேகம் ஏற்பட தம்பதியினரிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சண்முகம் வழக்கம்போல் நேற்று முன்தினம் தனது மனைவியை சந்தேகப்பட்டு அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஸ்வரி தனது தந்தையின் வீட்டிற்கு வந்துள்ளார். இதையடுத்து, நேற்றிரவு தேவாரத்திற்கு வந்த சண்முகம், மனைவியின் தந்தை வீட்டிற்கு சென்று அவருடன் தகராறு செய்துள்ளார்.
அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சண்முகம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜேஸ்வரியை சராமாறியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதைக்கண்ட பெற்றோர் ராஜேஸ்வரியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் ராஜேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார்.