தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேசிய தரச்சான்றிதழ் பெற அரசு வழங்கிய நிதியில் முறைகேடு..? - தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்தது என்ன?

Theni GH national standard certificate scam: தேனி அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச் சான்றிதழ் பெறுவதற்காக மருத்துவமனையை மேம்படுத்த அரசு ஒதுக்கீடு செய்த நிதியில் முறைகேடு நடந்து இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

Theni GH national standard certificate scam
தேனி அரசு மருத்துவமனை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 16, 2023, 10:57 AM IST

தேனியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. அனைத்து வசதிகளுடன் இயங்கக்கூடிய இந்த அரசு மருத்துவமனையில், நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புற நோயாளிகளும் 2000க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் மட்டுமல்லாமல், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து பொது மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்பெறும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று பெறுவதற்கான பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் 3 கோடியே 50 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதனையடுத்து மருத்துவமனையில் உயிர்காக்கும் நவீன மருத்துவ உபரகணங்கள், கூடுதல் கட்டிடங்கள், புதிய சாலை, வண்ண விளக்குகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன. இதற்கிடையே தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வராக பணியாற்றிய மீனாட்சி சுந்தரம் சமீபத்தில் லஞ்ச புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

அவருக்குப் பதிலாக அதே மருத்துவமனையில் தலைமை பேராசிரியராக பணியாற்றிய திருநாவுக்கரசு பின்னர் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர் கடந்த ஒரு ஆண்டாக மருத்துவமனையில் நடைபெற்ற வளர்ச்சி பணிகள் குறித்த வரவு செலவு கணக்குகள் குறித்து சரிபார்க்கப்பட்ட போது, அதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக தெரியவந்துள்ளது.

குறிப்பாக தேசிய தரச்சான்று பெற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு ஒதுக்கீடு செய்த 3 கோடியே 50 லட்ச ரூபாய் நிதியில் பெருவாரியான நிதி முறைகேடு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அரசு ஒதுக்கீடு செய்த நிதியில் 20 சதவீத பணிகள் கூட நடைபெறவில்லை என்றும், ஆனால் அதில் 3.50 கோடி ரூபாய்க்கு மேல் பொய்யான கணக்குகள் காட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தமிழக மருத்துவக்கல்வி இயக்குரகத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவக்கல்வி இயக்குநரக அதிகாரிகள் குழுவினர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையின் முடிவில் முறைகேடு குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தேசிய தரச்சான்று பெறுவதற்காக அரசு ஒதுக்கீடு செய்த நிதியில் முறைகேடாக செலவழிக்கப்பட்டு உள்ளதாக எழுந்த புகார், தற்போது தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமவனை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: மெட்ரோ இடம் ஆக்கிரமிப்பு... திமுக எம்.பி. கலாநிதி வீராசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details