தேனி: பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் போடி தாலுக்காவிற்கு உட்பட்ட மலை கிராம பகுதியாக உள்ளது அகமலை கிராமம். இந்த அகமலை ஊராட்சியில் ஊரடி, ஊத்துக்காடு கருங்கல்காடு, குரவன்குழி உட்பட 10க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர்.
இந்த ஊராட்சிக்கு உட்பட்ட மலை கிராமங்களுக்கு மின்சார வசதிகள் பெரியகுளத்தில் உள்ள மின் கம்பங்கள் மூலமாக செல்கிறது. இந்நிலையில் ஊரடி, ஊத்துக்காடு பகுதியில் கடந்த சில மாதங்களாக அங்கு உள்ள மின் மாற்றியில் தொடர்ந்து பழுது ஏற்பட்டுள்ளதால், கடந்த 6 மாதமாக மின்சாரம் இல்லாமல் மலை கிராம மக்கள் தவித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
தற்போது அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளும் மின்சாரம் இல்லாத நிலையில், மலை கிராம மக்கள் பெரிதும் அவதிப்படுவதாகவும், அவசர மருத்துவ தேவைக்கு கூட உதவி கேட்க முடியாத நிலையில் இருப்பதாகவும், வெளி உலகமே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.