தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"எனக்கு இயற்கை வியாபாரம்; இணையம் விளம்பரம்" - அசத்தும் 90'ஸ் கிட்ஸ் மங்கை - தேனி அம்மு நேச்சுரல்ஸ்

"வெறுங்கை என்பது மூடத்தனம்... விரல்கள் பத்தும் மூலதனம்..." என்ற தாராபாரதியின் வரிககளை கருத்தில் கொண்டு சுயதொழில் செய்து வருகிறார் ராஜேஸ்வரி. இயற்கையான முறையில் குளியல் சோப், ஷாம்பூ ஆகியவற்றை தயாரிக்கும் இவர் அவற்றை இணையத்தில் விளம்பரப்படுத்தி தனது தொழிலை பலப்படுத்தி வருகிறார்.

ராஜேஸ்வரி

By

Published : Nov 7, 2019, 7:25 AM IST

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பத்ரகாளிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (32). பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், தனது முன்னோர்களிடம் கற்றறிந்த அனுபவம் மூலமாகவும் புனேயில் உள்ள மகாராஜா இன்ஸ்டியூட்டில் சிறப்பு பயிற்சி பெற்றதன் மூலமாகவும் சோப்பு, ஷாம்பூ, ஹேர் ஆயில் உள்ளிட்டவைகளை தயாரித்து வருகிறார். ஆரம்பத்தில் தனது சொந்த தேவைக்காக மட்டுமே பொருட்களை தயாரித்து உபயோகப்படுத்தி வந்த இவரின் பணி, தற்போது "அம்மு நேச்சுரல்ஸ்" என்ற பெயரில் வணிகமாக மாறி நிற்கிறது.

சுயதொழில் செய்து வரும் ராஜேஸ்வரி பற்றிய தொகுப்பு

பொதுவாக வணிகம் செவ்வென நடைபெற விளம்பரமும், கவர்ச்சியும், நுகர்வோரை ஈர்க்கும் விதமும் அத்தியாவாசியமானதாய் இருக்கிறது. இதனால் பெரும்பான்மையான விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்களை நேரடியாக சந்தித்து தங்களது பொருட்களை சந்தைப்படுத்துவார்கள். ஆனால் ராஜேஸ்வரி வேறு விதமான யுக்தியை கையாள்கிறார். தான் தயாரித்த பொருட்களை பற்றி சமூக வலைதளங்களில் பதிவிட்டு தனது விற்பனையை தொடங்கினார். தற்போது இவர் தயாரித்த பொருட்களை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வாங்கி வருகின்றனர்.

பை சைக்கிள் பர்கர் - சுயதொழிலில் அசத்தும் பட்டதாரி இளைஞர்கள்

ராஜேஸ்வரியின் இந்த பணிக்கு உதவியாக இருப்பது அவரது கணவர் குருசாமியும் அவர்களது மகன் கிருத்திக் ரோஷனும்தான். கொத்தனார் வேலை செய்யும் குருசாமி வேலை முடிந்த பிறகு மனைவிக்கு உதவியாக மூலிகை பொருட்களை பறிப்பதற்கு உடன் செல்வது, தயாரிப்பு பணிகளில் உதவுவது, பேக்கிங் செய்வது, வாடிக்கையாளர்கள் முகவரிக்கு பொருட்களை அஞ்சல் படுத்துவது போன்ற பணிகளை செய்து வருகிறார். இவர்களது மகன் கிருத்திக் ரோஷனும் பொருட்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி பேக்கிங் செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்துவருகிறார்.

இயற்கையான முறையில் எண்ணெய்ல தயாரிக்கும் பணி

இது குறித்து பேசிய ராஜேஸ்வரி, தலைமுடி உதிர்வை தடுப்பதற்காக பாட்டி வைத்திய முறையில் செம்பருத்தி, கருவேப்பிலை, கடுக்காய் உள்ளிட்ட இயற்கை பொருட்களை செக்கு எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்தினேன். பின்னர், இயற்கையின் மீது கொண்ட அன்பால், மூலிகை பொருட்களின் நன்மைகளை இணையம் வாயிலாக அறிந்து கொண்டு அவற்றை மூலப்பொருளாக வைத்து சோப்பு, ஷாம்பூ, ஹேர் ஆயில் ஆகியவற்றை தயாரித்து வருகின்றேன்.

காட்டன் நாப்கின்களைத் தயாரிக்கும் இளம் சுயத் தொழிலாளி!

வயல்வெளிகள், தோட்டம், காடுகளில் கிடைக்கக்கூடிய முடக்கத்தான் இலை, நாயுருவி இலை, குப்பை மேனி, செம்பருத்தி, மருதாணி, வேப்பிலை, கற்றாழை, நெல்லிக்காய், பப்பாளி, தேங்காய் உள்ளிட்ட இயற்கை பொருட்களை மூலப் பொருட்களாகக் கொண்டு எல்லாப் பொருட்களையும் தயார் செய்கிறோம். சந்தனம், குப்பைமேனி, வேப்பிலை, தேங்காய் பால், ஆட்டுப்பால், பப்பாளி, நலுங்கு மாவு, கஸ்தூரி மஞ்சள், நுணா, நாயுருவி, கற்றாழை, ரெட் ஒயின் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சோப் வகைகளையும் தயார் செய்கிறோம்" என்கிறார்.

அம்மு நேச்சுரல்ஸின் தயாரிப்புகள்

தொடர்ந்து பேசிய அவர், தோல் வியாதிகள், சருமக் கோளாறுகள் வியர்வை நாற்றம், முகத்தில் முதிர்வு தன்மை உள்ளிட்ட பிரச்சனைகளை போக்க சோப் வகைகளும் அதேபோல இளநரை, முடி உதிர்வதைத் தடுப்பதற்கும் நன்றாக வளர்வதற்கும் ஷாம்பூ வகைகளையும் உற்பத்தி செய்கிறோம் என்கிறார்.

சுயதொழில் செய்யும் பெண்களுக்கு தன்னம்பிக்கை கூடும் - ஐஸ்வர்யா தனுஷ்

இது குறித்து வாடிக்கையாளர்கள் கூறுகையில், முகநூல் வாயிலாக பொருட்களின் தகவல்களை தெரிந்து அவற்றை வாங்கி பயன்படுத்துகிறோம். வெளி சந்தையில் விற்பனையாகும் பொருட்களின் விலையோடு ஒப்பிடுகையில், சரியான அளவு கிடைக்கிறது. மேலும் பொருட்களின் விலைக்கு ஏற்ப அதன் தரமும் இருப்பதால் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவிக்கின்றனர்.

பொழுதுபோக்கிற்காக இணையத்தை பயன்படுத்தி, பொன்னான நேரத்தை வீணடிப்பவர்களுக்கு மத்தியில் இயற்கையின் நன்மைகளை கற்றறிந்து அதன் மூலம் பொருட்களை தயாரித்து அவற்றை முகநூல் போன்ற சமூக வலைதளங்கள் வாயிலாக சந்தைப்படுத்தி வெற்றி அடைந்து வரும் இப்பெண்மணி பாராட்டுக்குரியவரே!!


"வெறுங்கை என்பது மூடத்தனம்... விரல்கள் பத்தும் மூலதனம்..." - தாராபாரதி

இதையும் படிங்க:

'இவர் கொண்ட காதலின் பிரதிபலிப்பு பசுமை' - ஜஷ்வந்த் சிங்

ABOUT THE AUTHOR

...view details