தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து கேரள மாநிலத்தில் இடுக்கி, பத்தினம்திட்டா, எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்தது.
இதனையடுத்து, இந்த நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தென் தமிழ்நாட்டின் முக்கிய நீராதாரமாகத் திகழும் முல்லைப்பெரியாறு அணைக்கு தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பருவமழை தொடங்கியது முதலே அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய அளவு நீரின்றி காணப்பட்டது. தேக்கடி, வண்டிப்பெரியார், ஆனவச்சால் உள்ளிட்ட முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நேற்று பெய்த கனமழை காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து 336 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் தமிழ்நாடு பகுதிகளுக்கு திறந்துவிடப்படும் நீர்வரத்தும் 200 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 112.10 அடியாக இருந்தது. அணையின் நீர் இருப்பு 1,247 மி.கனஅடியாக இருக்கின்றது.
தொடர்ந்து இதேபோல் கனமழை பெய்தால் அணையின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கக் கூடும். கேரளாவில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.