தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதையடுத்து அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்துவருகிறது. அதேபோல் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்து முக்கிய நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் நீர்நிலைகளின் கொள்ளளவும் அதிகரித்துவருகிறது.
பெரியகுளம், போடி, தேவதானப்பட்டி, உள்ளிட்ட இடங்களில் பெய்துவந்த தொடர்மழையால் 126அடி நீர்மட்ட அளவு கொண்ட சோத்துப்பாறை அணை, 57 அடி நீர்மட்ட அளவு கொண்ட மஞ்சளாறு அணை ஆகியவை கடந்த சில தினங்களுக்கு முன் நிரம்பியது. மேலும் தீவிரமடைந்துவரும் கனமழையால் இவ்வணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து மேகமலை, ஹைவேவிஸ் உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த தொடர் மழையால் ராயப்பன்பட்டி அருகே உள்ள 52.5 அடி நீர்மட்டம் அளவு கொண்ட சண்முகாநதி நீர்த் தக்கமும் அதன் முழுக்கொள்ளவை எட்டி நிரம்பி வழிகின்றது. சண்முகாநதி அணையின் நீர் இருப்பு 79.57 கனஅடியாக இருந்த நிலையில் அணை முழு நீர்மட்ட அளவை எட்டியதால், தற்போது நீர்வரத்தான மூன்று கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமான முல்லைப்பெரியாறு அணையின் நீர்வரத்து 4837 கன அடியாக உள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 127.90 அடியை எட்டியுள்ளது.