தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அகமலை மலைக் கிராமம் உள்ளது. போடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இந்த அகமலை ஊராட்சியில், சின்னூர், பெரியூர், அண்ணாநகர், ஊரடி, ஊத்துக்காடு, கரும்பாறை, பட்டுர், சொக்கன்அலை உள்ளிட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. சுமார் 500க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வரும் இப்பகுதியில் காப்பி, ஆரஞ்சு, எலுமிச்சை, வாழை போன்ற பயிர்கள் பயிரிட்டு வருகின்றன. இங்கு விளையும் பயிர்களை அகமலை தவிர மற்ற கிராமங்களில் உள்ளவர்கள் குதிரை மற்றும் கழுதைகள் முலமாக பெரியகுளம் கொண்டு வந்து விற்பனை செய்வர். அகமலை கிராமத்திற்கு மட்டுமே நீண்ட ஆண்டுகளுக்குப்பிறகு சாலை வசதி செய்து தரப்பட்டுள்ளது. அதிலும் ஜூப்களில் மட்டுமே செல்ல முடியும்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அகமலை மலைச்சாலையில் மூன்று இடங்களில் பாறைகள் உருண்டு விழுந்து முற்றிலுமாக போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. மேலும் சாலைகளில் கிடக்கும் பாறைகளை அப்புறப்படுத்தும் பணிகளும் தொடங்காததால், இப்பகுதி மலைவாழ்மக்கள் விவசாய விளை பொருட்கள் உள்ளிட்டவைகளை தலைச்சுமையாக சுமந்து சென்று பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.