கரோனா வைரஸ் நோய் பரவல் தேனி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் இன்று தேனியில் மாவட்ட ஆட்சியர், வருவாய், சுகாதாரத் துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜக்கையன், வருவாய், சுகாதாரத்துறையைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் கரோனா தடுப்பு பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் கேட்டறிந்தார்.அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் கரோனா நோய்த்தொற்று குறைந்து கொண்டு வருகிறது. தற்போதுதான் கவனமாக இருந்து மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நோய்த் தொற்று வேகமாக பரவி வரும் இந்த காலகட்டத்திலும் ஊரகப் பகுதிகளில் உள்ள மக்கள் முகக்கவசம் அணியாமல் தான் உள்ளனர். இந்த பழக்க வழக்கத்தை மாற்ற வேண்டும்.
தேனி மாவட்டத்தில் நோய் தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கிறோம். பொதுமக்களில் பலர் கரோனா இல்லை என நினைத்துக்கொண்டு பரிசோதனை மேற்கொள்ளாமல் இருந்து கொண்டு பலருக்கும் பரப்பி வருகின்றனர். அதிகரித்து வரும் எண்ணிக்கையை பார்த்து மக்கள் பயப்பட வேண்டாம்.