தேனி:கொடுவிலார் பட்டியில் உள்ள ஐஸ்வர்யா நகர்ப் பகுதியில், தனியார் குடோன் ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா பதுக்கி வைத்திருப்பதாகக் காவல் துறைக்கு ரகசியத் தகவல் வந்துள்ளது. எனவே, கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் சுமார் இரண்டு நாட்கள் தேனி மாவட்ட கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்க்ரே தலைமையிலான தனிப்படையினர், சார்பு ஆய்வாளர் கதிரேசன் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் காவல் துறை ரோந்து பணியில் ஈடுபட்டு, தீவிரமாகக் கண்காணித்து வந்தது தெரியாமல் குடோனில் குட்கா, பான் மசாலா எடுக்க வந்த அதன் உரிமையாளர் குமரேசன் காவல் துறையினரிடம் கையும் களவுமாக மாட்டிக்கொண்டார். இதனை அடுத்து, அவரை குடோனில் வைத்து சுமார் 300 கிலோ மதிப்பிலான குட்கா பான் மசாலாக்களுடன் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், அவர் கடத்தலுக்குப் பயன்படுத்திய டாட்டா ஏசி வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட குமரேசனிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், சொக்கத்தேவன்பட்டியை சேர்ந்த முத்தீஸ்வரன் என்பவர் வீட்டில் குட்கா, பான் மசாலா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. எனவே, அங்குச் சோதனை மேற்கொண்டு அவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட சுமார் 100 கிலோ குட்கா பான் மசாலாக்களை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.