தேனியில் ஆட்டு உரல் கல்லை அகற்றாமல் போடப்பட்ட தார்சாலை : வாகன ஓட்டிகள் அதிர்ச்சி ! தேனி:அல்லிநகரம் நகராட்சியில் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள உள்ள சி2 சாலை மிராண்டா தெரு சாலை, மணிமேகலை தெரு சாலை உள்ளிட்டவை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. இந்த சாலையை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக ரூ.2 கோடியே 62 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் விடப்பட்டது.
புதிய சாலை அமைக்கும்போது பழைய சாலையை அகற்றிவிட்டு அமைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனால், பழைய சாலையை அகற்றும் பணி நடந்தது. ஆனால், பல இடங்களில் பணிகளானது அரைகுறையாக நடந்த நிலையில், மேற்கொண்டு சீரமைப்புப் பணிகள் தொடங்கப்படாமல் 1 மாத காலத்துக்கும் மேல் முடங்கியது.
இதனால், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். அடிக்கடி வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து விபத்துகளில் சிக்கி வந்தனர். இதையடுத்து சாலை அமைக்கும் பணிகள் கடந்த மாதம் 27ஆம் தேதி தொடங்கியது. கே.ஆர்.ஆர்.நகர், பாரஸ்ட் ரோடு, காந்திஜி ரோடு, சமதர்மபுரம்,பழைய அரசு மருத்துவமனை சாலையின் ஒரு பகுதி, மிராண்டா லைன் போன்ற பகுதிகளில் சாலை சீரமைப்புப் பணிகள் நடந்துள்ளன. ஆனாலும் என்.ஆர்.டி. நகர், பழைய அரசு மருத்துவமனை சாலை போன்ற பகுதிகளில் இன்னும் சீரமைப்புப் பணிகள் நடக்கவில்லை.
பின்னர் பொதுமக்களின் புகாரை அடுத்து மீண்டும் சாலை சீரமைக்கும் பணி தொடங்கியது. அப்போது நகராட்சி அலுவலகம் அருகே உள்ள சி2 சாலையில் தார்ச் சாலை அமைக்கும் பணியின்போது சாலையின் நடுவே இருந்த ஆட்டு உரல் கல்லை அகற்றாமல் அதன் மீது தார்ச் சாலை போடப்பட்டு உள்ள சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
புதிதாகப் போடப்பட்ட சாலையின் நடுவே குன்று போல் ஆட்டு உரல் கல் இருந்தது. பின்னர் பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து புதிதாக போடப்பட்ட சாலையைத் தோண்டி கல்லை அப்புறப்படுத்தி அந்த இடத்தில் மண்ணை போட்டு நிரப்பினர். மேலும் தெருக்களில் போடப்பட்ட சாலைகள் தரமற்ற முறையில் இருப்பதாகவும் முறையாகப் பணிகளை மேற்கொள்ளாமல் அரைகுறையாக பணிகளை மேற்கொள்வதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும் இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறும்போது, ''தேனி நகரில் சாலை சீரமைப்புப் பணிகள் தரமற்ற நிலையில் நடக்கிறது. முன்பு இருந்ததை விடவும் சாலை தற்போது மோசமாகி இருப்பதாகத் தெரிகிறது. வேகத்தடை அமைக்கப்பட்ட இடங்களில் விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வேகத்தடை அகற்றப்பட்ட சில இடங்களில் வேகத்தடை அமைக்கப்படவும் இல்லை. எனவே, மாவட்ட கலெக்டர் இதனை நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
இதையும் படிங்க :யூடியூப் சேனல் நடத்துவதில் போட்டி: வாலிபரை கத்தி முனையில் கடத்திய கும்பல் - தருமபுரியில் நடந்தது என்ன?