தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"எழுவர் விடுதலை குறித்து ஆளுநர் தீவிர ஆலோசனை"- துணைமுதலமைச்சர் ஓ.பி.எஸ் சூசகம்!

தேனி: நளினி, பேரறிவாளன் உட்பட ஏழு பேர் விடுதலை ஆளுநரின் தீவிர பரிசீலனையில் உள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

By

Published : Aug 29, 2019, 10:33 PM IST

கேரளாவில் பெய்த கனமழையால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்ததையடுத்து தமிழ்நாட்டிற்குத் திறக்கப்பட்ட தண்ணீரால் வைகை அணையின் நீர்மட்டம் 50அடிக்கும் அதிகமாக உயர்ந்தது.

இதனால் மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள இரு போக பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்படி வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இந்நிலையில், வைகை அணையில் இருந்து வினாடிக்கு 900 கனஅடி வீதம் தண்ணீரை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை திறந்து வைத்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில்,

"வைகை அணையில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் 1,231 தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்வது தொடர்பாக கருத்துகள் பெறப்பட்டு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் முடிவு அறிவிக்கப்படும் .

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதியில் நிலவும் வறட்சியைப் போக்க 12 கோடி ரூபாய் செலவில் கண்டமனூர் பகுதியில் குடிநீர் திட்டம் செயல்படுத்துவதற்கு சென்ற மாதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முழுமையாக வறட்சியைப் போக்க கடமலைக்குண்டு பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நளினி, பேரறிவாளன் உட்பட ஏழு பேர் விடுதலை குறித்து, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டு ஆளுநரின் முடிவுக்கு உச்சநீதிமன்றம் விடப்பட்டுள்ளதால், அவரின் தீவிர பரிசீலனையில் இருப்பதாக” தெரிவித்தார்.

வைகை அணையில் நீர் திறப்பு - துணைமுதலமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்பு

இந்நிகழ்வில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, எம்.எல் ஏக்கள் ஜக்கையன், தேனி எம்.பி. ரவீந்திரநாத்குமார் மற்றும் தேனி, மதுரை மாவட்ட ஆட்சியர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details