தேனி: காதலர் தினம் நெருங்கி வரும் நிலையில், கம்பம் பகுதியில் உள்ள தனியார் கிப்ட் கடையில் புதிய வகையான பொருட்கள் நவீன எந்திரங்கள் மூலம் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உணர்வுப்பூர்வமாக அனுபவிக்கும் காதலை அனைவரும் கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.
காதலர் தினத்தின் அழகை விரிவுபடுத்தி தங்களின் விருப்பமுள்ள நபர்களுக்கு ஏதேனும் பரிசுப்பொருட்கள் கொடுத்து அன்பை வெளிப்படுத்துவது வழக்கம். காதலர் தினம் நெருங்கி வருவதால், இந்த நேரத்தில் புதுமணத் தம்பதிகள், நீண்ட நாட்களாகக் காதலித்து வந்த காதலர்கள் என அனைவரும் ஆன்லைன் மூலமாகவும் கடைவீதிகளிலும் தங்களின் விருப்பமுள்ளவர்களைக் கவரும் வகையிலான பரிசுகளை வாங்கத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் கம்பம் பகுதியில் உள்ள கிப்ட் கடையில் காதலர் தினத்தை முன்னிட்டு பிரத்யேகமாக பல்வேறு வகையான கிப்ட்கள் தயாரிக்கப்பட்டு ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் இதர ஆன்லைன் தளத்திலும், மற்ற கடைகளுக்கு மொத்த விற்பனையாகவும் விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஆண்டு காதலர் தினத்திற்காகப் பிரத்தியேகமாக புதிய வரவு கிப்ட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.