தேனி: பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டறிய சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிறு, குறு, நடுத்தர, பெரிய விவசாயிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு சார்பில் பிரதம மந்திரிகிசான் சம்மான் நிதித் திட்டம்அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளின் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.6000 வீதம் வழங்கப்படும். இவை ரூ.2000 என மூன்று தவணைகளாக பகிர்ந்தளிக்கப்பட்டு, அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
இச்சூழலில், மதுரை, கரூர், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் இந்த திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றஞ்சாட்டி வந்தனர். இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டத்திலும் கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்த விவசாயி பசும்பொன் அதிபதி என்பவர் 2018ஆம் ஆண்டு இறுதியில் பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் நிதியுதவி வேண்டி விண்ணப்பித்துள்ளார். இதற்காக தனது ஆதார் எண், நில உரிமை நகல், வங்கிக் கணக்கு எண் போன்ற விவரங்களை இணைத்து பதிவு செய்துள்ளார். ஆனால் விண்ணப்பித்து இரண்டாண்டு ஆகியும் தற்போது வரை அவரது வங்கிக் கணக்கில் பணம் ஏதும் வரவு வைக்கப்படவில்லை.