தேனி மாவட்டம் பெரியகுளம் வடபுதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர். அவரது மகன் லோகேஷ் (4) அதே பகுதியைச் சேர்ந்த பாண்டி (4) என்ற சிறுவனுடன் நேற்று (ஜூன் 8) மாலை தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். அதன்பின் நீண்ட நேரமாகியும் சிறுவன் லோகேஷ் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர், உறவினர்கள் அவரைத் தேடினர்.
பல இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்காததால் பெற்றோர் அல்லிநகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் வடபுதுப்பட்டிக்கு விரைந்த காவல் துறையினர், சிறுவன் பாண்டியிடம் விசாரணை நடத்தி அவரையும் உடன் அழைத்துக்கொண்டு லோகேஷை தேடத் தொடங்கினர்.
அந்தத் தேடுதலில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த தெருவிலிருந்து அரை கி.மீ. தூரத்தில் 150 அடி ஆழமுள்ள தண்ணீரில்லாத கிணற்றிலிருந்து சிறுவனின் அழுகுரல் கேட்டுள்ளது.
உடனே கிணற்றில் பார்த்த காவல் துறையினர் சிறுவன் கிணற்றில் விழுந்து படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதை அறிந்தனர்.