தேனி:கேரள மாநிலம் மூணாறு சின்னக்கல் பகுதியில் அட்டகாசம் செய்து வந்த அரிகொம்பன் யானையை வனத்துறையினர் கடந்த கடந்த மாதம் மயக்க ஊசி செலுத்தி 4 கும்கி யானையின் உதவியுடன் தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள பெரியார் புலிகள் வன சரணாலயத்தில் கொண்டு வந்து விட்டனர். அங்கிருந்து தமிழக வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்த யானை ஹவேவிஸ் மேகமலை பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்களை அச்சுறுத்தி வந்தது.
பின்னர், கடந்த இரண்டு தினங்களாக குமுளி ரோஜாப்பூ கண்டம் வழியாக லோயர் கேம்ப் பகுதிக்கு இடம் பெயர்ந்த யானை கூடலூர் அருகே கழுதை மேட்டுப்பகுதியில் உள்ள தனியார் தென்னந்தோப்பில் புகுந்தது. பின் யானை கூடலூர் அருகே உள்ள கழுதை மேட்டில் இருந்து இடம் பெயர்ந்து கூடலூர் வழியாக கம்பம் பகுதியை வந்தடைந்தது. மக்கள்தொகை அதிகம் கொண்ட கம்பம் பகுதியில் அரிகொம்பன் காட்டு யானை புகுந்ததை கண்டு கம்பம் பகுதி மக்கள் மிகுந்த அச்சம் கொண்டனர்.
நேற்று (28/5/23) அதிகாலை யானை கம்பத்திலிருந்து இடம் பெயர்ந்து சுருளிப்பட்டி அருகே உள்ள யானை கஜம் பகுதிக்கு சென்றது. மேலும் அந்தப் பகுதியில் ஒரு சில விளைநிலங்களை அரிகொம்பன் யானை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் யானையை சுருளிப்பட்டி கிராம பகுதிக்கு இடம் பெயர்ந்திருக்கும் அரிகொம்பன் யானையை கும்கி யானைகளின் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக சிறப்பு நிபுணர் வரவழைக்கப்பட்டனர்.
அதிகாலை கோவை மாவட்டம், ஆனைமலையில் இருந்து சுயம்பு என்ற கும்கி யானையையும் கம்பம் நகர் பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர். மேலும் அரிசி ராஜா மற்றும் உதயன் என்ற இரண்டு கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டு கம்பம் புறவழிச்சாலை தனியார் மண்டபத்திற்கு அருகே உள்ள புளியந்தோப்பில் யானைகளை வனத்துறையினர் வைத்துள்ளனர்.
யானையை பிடிக்க துறையினர் மேற்கொள்ள நடவடிக்கைகளை கண்காணிக்கவும், யானையால் ஏற்பட்ட பாதிப்புகளை கண்காணிக்கவும், அரிகொம்பன் யானையை பத்திரமாக பிடித்து வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக ஆலோசனை செய்யவும் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்கு வருகை புரிந்தார்.
கம்பம் சுருளிப்பட்டியில் அரிகொம்பன் யானை சென்ற இடத்தை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், தேனி மாவட்ட ஆட்சியர், மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பார்வையிட்டனர். இந்த ஆய்வின் முடிவில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் செய்தியாளர்களின் சந்திப்பில், "அரிகொம்பன் என்ற அரிசிக்கொம்பன் என்னும் யானை கிட்டதட்ட 35 வயது மிக்க ஆண் யானை. கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கேளா மாநில வனத்துறையினரால் பிடிப்பட்டு, முல்லைக் கொடி பகுதிக்குட்பட்ட பெரியார் புலிகள் வனப்பகுதியில் கடந்த மாதம் 29.04.2023 அன்று விடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, யானை வண்ணாத்திப்பாறை வனப்பகுதியான தேனி மாவட்டம், மேலக்கூடலூர் கிராமப்பகுதிக்கு கடந்த 30.04.2023 அன்று வந்துள்ளது. மேலும், ஹைவேவிஸ் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிக்கும் யானை வருகை தந்துள்ளது. அதனைத் தொடர்ந்து தேனி மாவட்டம், குமுளி சுரங்கணாறு பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஒரு விளை நிலப்பகுதியில், 27.05.2023 அன்று சுமார் மாலை 4.00 மணி அளவில் யானை காணப்பட்டுள்ளது. அங்குள்ள ஒரு சில நபர்களால் யானைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, கெஞ்சிகவுண்டன் குளம் மின்சார வாரியம் துணை நிலையத்திற்கு அருகில் யானை இருப்பதை கண்டறிந்த வனத்துறை அலுவலர்கள், மாவட்ட நிர்வாக அலுவலர்கள் மற்றும் காவல் துறையை சார்ந்தவர்கள் யானையை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்ட போது, ட்ரோன் கேமிரா மூலம் ஒரு நபர் ஒளிப்பதிவு செய்ததன் மூலம் யானைக்கு இடையூறு ஏற்பட்டு, காந்தி நகரில் இருக்க கூடிய கம்பம் - குமுளி புறவழிச்சாலை வாழை தோட்டத்தில் தங்கியுள்ளது.
ஒவ்வொரு இடத்திலும் ஏற்பட்ட இடையூறுகளால் யானை பயத்திற்குட்பட்டு ஒவ்வொரு இடத்திலிருந்தும் மாறி, மாறி பயணம் செய்து வந்துள்ளது. மேலும், எதிர்பாரத விதமாக கம்பம் நகர்பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களுக்கு சில இடையூறுகளை ஏற்படுத்தி உள்ளது. இதனை அறிந்த மாவட்ட நிர்வாகம், வனத்துறை, காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, நகர்ப் பகுதியிலிருந்து யானை வெளியேற்றப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.