தேனிமாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ளது, பெரியூர். இந்த ஊரானது, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகாவின் வெள்ளகெவி ஊராட்சிக்கு உட்பட்டது. ஆனால் பெரியூர் மலை கிராம மக்கள், பெரியகுளத்தில் இருந்துதான் வெளியே செல்ல வேண்டிய நிலை உள்ளது. தொடர்ந்து 100 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி இல்லாத நிலையில், நடந்தே அங்கு விளைவிக்கும் விளைபொருட்களைக் கொண்டு வருவதும், உணவுப் பொருட்களை கொண்டு செல்வதுமாக இருந்து வருகின்றனர்.
மேலும், 1882 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியின் போது அந்தப் பகுதிக்கு சாலை அமைப்பதற்கான ரைட் ஆப் உரிமத்தை வழங்கியுள்ளனர். தொடர்ந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பு தற்போது வரை தமிழ்நாடு அரசு சாலை அமைத்து தராத நிலையில், அவர்கள் செல்லும் பாதை முழுவதும் புதர் மண்டி இருப்பதால் மக்கள் செல்வதற்கு பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் பெரியூர் கிராம மக்கள் ஒன்றிணைந்து அவர்கள் செல்லும் மலைப் பாதையில் உள்ள புதர்களை அகற்றி, சாலையை சீரமைப்பதற்காக இன்று (ஜூலை 11) நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பாதையில் இருந்த புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர், சாலையை சீரமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதால், மலைகிராம மக்கள் அனைவரும் வனத்துறை அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.