சென்னை: தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்துள்ள நிலையில் வனப்பகுதியில் குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத் தீ பரவத் தொடங்கியுள்ளது. கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் 100 ஹெக்டெருக்கு மேல் வனப்பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதால் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட தாவர இனங்கள் மற்றும் அரிய வகை மரங்களும் தீயில் கருகியிருக்கக் கூடும் என வன ஆர்வலர்கள் மத்தியில் கவலை எழுந்துள்ளது.
மேலும் காட்டுத் தீ கோடைக் காலங்களில் அதிகமாக ஏற்படும் என்பதால் வனத்துறை இதனைக் கவனத்தில் கொண்டு கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். வன ஆர்வலர்களின் கூற்றுப்படி, கடந்த ஒரு வாரமாக, தேனி வனப்பகுதியில் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்பட்டு வருவதுடன், இதனால் வனப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்துகளால் வனவிலங்குகளுக்கு கடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், பரவி வரும் காட்டுத்தீயில் காட்டெருமை, மான், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட பல வகையான வனவிலங்குகள் தீயில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், தீ அணைக்கப்பட்டுவிட்டதாக வனத்துறை அதிகாரிகள் கூறினாலும் சமீபகாலமாக அதிகரித்து வரும் வெப்பம், காட்டுத்தீ அதிகரிப்பதற்கு காரணமாக இருந்தன என்று ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில வாரங்களில் முயல்பாறை, தேன்கனிக்கோட்டை, பிச்சாங்கரை போன்ற வனப்பகுதிகளில் தீ பரவிய நிலவில், அதிர்ஷ்டவசமாக வனத்துறையினர் முதற்கட்ட நிலையிலேயே தீயை அணைக்க முடிந்தது.
மேலும் அசம்பாவிதங்கள் நிகழும் பட்சத்தில் வனத்துறையினர் வனப்பகுதிகளை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். கோடை வெப்பம் அதிகரித்து வருவதால், பரவும் தீயைக் கட்டுப்படுத்த பல கண்காணிப்புக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல், கொடைக்கானல், தேனி, தேன்கனிக்கோட்டை, கம்பம் மற்றும் மேற்குத்தொடர்ச்சியில் உள்ள சில வனப்பகுதிளில் காட்டுத் தீ கடுமையாக பரவியது. வன விலங்கு ஆர்வலர்களின் கூற்றுப்படி, ஒரு பக்கம் காட்டுத் தீ வெப்பத்தினால் பரவுகிறது என்றாலும், மறுபக்கம் மனிதர்களினாலே பரவுகிறது என்கின்றனர்.