தேனி:தேனிமாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், ஈஸ்வரன். இவர் வண்ணத்திப்பாறை பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்குச் சென்றுள்ளார். தோட்ட வேலைக்காகச் சென்ற அவர், அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது வனப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட கூடலூர் வனத்துறையினர், ஈஸ்வரனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.
மேலும், ஈஸ்வரன் அத்துமீறி வனத்திற்குள் நுழைந்ததாகவும், ரோந்துப் பணியில் ஈடுபட்ட வனத்துறையினரை கத்தியை காட்டி மிரட்டியதாகவும் கூறி, ஈஸ்வரனை துப்பாக்கியால் சுட்டதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். ஈஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கேட்டு ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், ஈஸ்வரனை வனத்துறையினர் சுட்டுக் கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கம்பம் அரசு மருத்துவமனை முன்பு, தேனி - குமுளி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.