தேனி:பெரியகுளம் அருகேயுள்ள கைலாசபட்டியில் தேனி மக்களவைத்தொகுதி எம்.பி. ரவீந்திரநாத்திற்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சோலார் வேலியில் கடந்த மாதம் சிறுத்தை ஒன்று சிக்கிய நிலையில், அதனை மீட்கச்சென்ற வனத்துறையினர் மீது சிறுத்தை தாக்கி தப்பிச் சென்றது.
இந்நிலையில் மறுநாளே அதே தோட்டத்தில் சிறுத்தை சோலார் மின் வேலியில் மாட்டி உயிர் இழந்தது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், இது தொடர்பாக ரவீந்திரநாத் (ஓபிஆர்) தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைத்த ஒருவரையும் அதனைத்தொடர்ந்து ரவீந்திரநாத்தின் மேலாளர்கள் இருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.
இந்தச்சூழலில், சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் எம்.பி. ஓபிஆர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேனி மாவட்ட திமுக வடக்கு மாவட்டச்செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், மற்றும் பெரியகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சரவணகுமார் தலைமையிலான திமுகவினர் தேனி மாவட்ட வன அலுவலர் சம்ருதாவிடம் புகார் ஒன்றை அளித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக வனத்துறை தோட்டத்தின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.