தேனி: கம்பம் நகர் பகுதிக்குள் மே 27 ஆம் தேதி காலை திடீரென புகுந்த அரி கொம்பன் யானை, வாகனங்களை சேதப்படுத்தியும், பொதுமக்களை அச்சுறுத்தியும் உலா வந்தது. எனவே, கம்பம் பகுதியில் அரி கொம்பன் (Ari komban) நடமாட்டத்தால் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக கம்பம் நகர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், கம்பம் பகுதியில் உள்ள விளைநிலங்களில் புகுந்து அரி கொம்பன் தஞ்சம் அடைந்திருந்தது. பிறகு அங்கிருந்து கூடலூர் சாலை பகுதிக்கு சென்றது. இதனால், அந்தப் பகுதி முழுவதும் போக்குவரத்தை நிறுத்திய வனத்துறையினர் யானையைப் பின் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் மே 28 ஆம் தேதி அதிகாலை அரி கொம்பன் யானை சாமாண்டிபுரம் வழியாக சுருளிப்பட்டிக்கு நுழைந்தது. சுருளிப்பட்டி ஊருக்குள் வராமல் வனத்துறையினர் நடவடிக்கைகள் மேற்கொண்ட நிலையில், சுருளிப்பட்டி வனப்பகுதிக்குள் யானை தஞ்சம் அடைந்தது. இதனால், சுருளி அருவிக்கு பொதுமக்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.
மேலும், பொள்ளாச்சி பகுதியில் இருந்து பிரத்யேக வாகனம் மூலம் வரவழைக்கப்பட்ட சுயம்பு மற்றும் முத்து ஆகிய கும்கி யானைகள் (Kumki Elephants Swayambu and Muthu) தயார் நிலையில் கம்பம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வனப்பகுதிக்குள் தொடர்ந்து தஞ்சம் அடைந்துள்ள அரி கொம்பன் மீண்டும் நகர் பகுதிக்குள் வராமல் வனத்துறையினர் முன்னெச்சரிக்கையாக தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.