அரிக்கொம்பன் யானை பிடிபடும் வரை 144; தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் தேனி:கேரள மாநிலம் மூணாறு பகுதிகளில் அட்டகாசம் செய்து வந்த அரிக்கொம்பன் யானையை வனத் துறையினர் கடந்த மாதம் மயக்க ஊசி செலுத்தி 4 கும்கி யானையின் உதவியுடன் தமிழ்நாடு - கேரள எல்லையில் அமைந்துள்ள பெரியார் புலிகள் வன சரணாலயத்தில் கொண்டு வந்து விட்டனர். அங்கிருந்து தமிழ்நாட்டின் வனப் பகுதிக்கு இடம் பெயர்ந்த யானை ஹவேவிஸ் மேகமலை பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்களை அச்சுறுத்தி வந்தது.
கடந்த 27ஆம் தேதி காலை கம்பம் நகர் பகுதிக்குள் திடீரென உலா வந்த அரிக்கொம்பன் யானை, அங்கிருந்த பொதுமக்களை விரட்டி அச்சுறுத்தியது. அதனைத் தொடர்ந்து யானையால் பொதுமக்களுக்கும், பொதுமக்களால் யானைக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு கம்பம் நகர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், மேகமலை கோட்டத்துக்கு உட்பட்ட கூத்தனாட்சி காப்பு வனப்பகுதியில் சுற்றித் திரிந்த அரிக்கொம்பன் என்ற ஒற்றை காட்டு யானையானது இன்றைய நிலையில் சண்முகாநதி நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள எரசக்கநாயக்கனூர் காப்பு வனப்பகுதிக்குள் தஞ்சம் அடைந்துள்ளது.
மேலும், இந்த யானையினை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க ஏதுவாக 5 நபர்கள் அடங்கிய கால்நடை மருத்துவர்கள் குழு மற்றும் மூன்று கும்கி யானைகள் கம்பம் பகுதிக்கு வரவழைக்கப்பட்டன. கும்கி யானைகள் தற்போது கம்பம் வனச்சரக அலுவலக வாளகத்தினுள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அரிக்கொம்பன் யானையினை கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழுவானது வனத்துறை அலுவலர்கள் தலைமையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வனத்துறை மற்றும் யானை தடம் கண்காணிப்பாளர்கள் அடங்கிய 85 நபர்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் வனப்பகுதிக்குள் இருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரிக்கொம்பன் யானையானது பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு தற்போது வெகு தொலைவில் உள்ளது. இருப்பினும், அரிக்கொம்பன் யானையானது மீண்டும் ஊருக்குள் திரும்பி வர நேரும் என்பதால், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க கம்பம் மற்றும் கூடலூர் நகராட்சி முழுவதிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
மேலும், பொதுமக்களின் அத்தியாவசிய நடவடிக்கைகளை வழக்கம்போல் மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், அரிக்கொம்பன் யானை பல இடங்களில் உலா வருவது போல தவறான மற்றும் சம்பந்தமில்லாத வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வாட்ஸ் அப், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பகிர்வதை தவிர்த்திடவும், மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அரிக்கொம்பன் யானையினை பிடிக்க மேற்கொள்ளப்படும் பணிகள் நிறைவு பெறும் வரை, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவசியமின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும், இரவு நேரங்களில் வெளியில் வருவதை தவிர்த்து வனத் துறையினருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: மாந்தோப்பில் புகுந்த 8 அடி மலைப்பாம்பு.. மிரண்டு ஓடிய தொழிலாளிகள்!