தேனி: கைலாசப்பட்டியில் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர நாத்துக்குச் சொந்தமான தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த வேலியில் சிக்கி சிறுத்தை ஒன்று உயிரிழந்தது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், ரவீந்திர நாத்தின் இரண்டு மேலாளர்களையும், அவரது தோட்டத்தில் ஆட்டு கிடை அமைத்தவரையும், வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என வனத்துறையினர் சார்பில், தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில் கடந்த 12-ம் தேதி நேரில் ஆஜரான தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரிடம், மூன்று மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்தச்சூழலில் ரவீந்திர நாத்தின் மேலாளர் கிருஷ்ணாவை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தேனி வனச்சரக அலுவலர்கள் சம்மன் அனுப்பிய நிலையில், இன்று கிருஷ்ணா தனது வழக்கறிஞர்களுடன் வனத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
அவரிடம் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. தேனி உதவி வன பாதுகாப்பு அலுவலர் ஷர்மிலி அவரிடம் விசாரணை நடத்தினார். சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்திடம் விசாரணை நடத்தியபோது, அவர் கூறிய தகவலின் அடிப்படையில் கிருஷ்ணாவிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது.
தேனியில் சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் எம்.பி. ரவீந்திரநாத்தின் மேலாளரிடம் விசாரணை இதையும் படிங்க:தேனியில் அடுத்தடுத்து பகீர்: மொட்டை மாடியில் காய்ந்த சிறுத்தையின் தோல்!