தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 25, 2023, 8:02 PM IST

ETV Bharat / state

Periyakulam:காலாவதி தேதியில்லாத உணவுப்பொருட்கள் பறிமுதல்; தேனியில் தொடரும் ரெய்டு

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் 5 கிலோ இனிப்புப் பொருட்கள், காலாவதி தேதியில்லாத 40 கிலோ பொருட்கள், 5 கிலோ நெகிழிப்பைகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு ரூ.2,000 அபராதம் விதித்தனர்.

Etv Bharat
Etv Bharat

தேனி:தமிழ்நாட்டின் பல பகுதிகளில் துரித உணவங்கள், பழக்கடைகள், ஐஸ்கிரீம் கடைகள், பல்பொருள் அங்காடிகள், இறைச்சிக் கடைகள் உள்ளிட்டப் பல இடங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சுகாதாரமற்ற உணவுகளைப் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அபராதம் விதித்தும் வருகின்றனர்.

அந்த வகையில், தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி மருத்துவர் ராகவன் தலைமையிலான உணவு பாதுகாப்புத் துறையினர் பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட தென்கரைப் பகுதியில் உள்ள தேநீர் கடை, இனிப்பகங்கள், மளிகைக் கடை, பழக்கடை உள்ளிட்ட கடைகளை ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் தென்கரைப் பகுதியில் பெரும்பாலான இனிப்பகங்களில் அதிக நிறமூட்டிகளைப் பயன்படுத்தி செய்யப்பட்ட இனிப்பு பலகாரங்கள், தடை செய்யப்பட்ட பாலித்தீன் பொருட்கள், காலாவதி தேதி குறிப்பிடாமல் பேக்கிங் செய்யப்பட்ட இனிப்புப் பொருட்கள் உள்ளிட்டவைகளை விற்பனை செய்யப்பட்டதை உணவு பாதுகாப்புத் துறையினர் கண்டுபிடித்தனர். மேலும், அவற்றை உடனடியாக அக்கடைகளில் இருந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும், மளிகைக் கடைகளில் பல்வேறு உணவுப் பொருட்களில் காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களையும் பறிமுதல் செய்து அவற்றில் மீண்டும் பயன்படுத்தாதவாறு பினாயில் தெளித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி மருத்துவர் ராகவன் கூறுகையில், 'தேனி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து உணவுப் பாதுகாப்புத் துறையினர் காலாவதி தேதி குறிப்பிடாமல் உணவுப் பொருட்கள் விற்பனை செய்து வருகின்றனர். அதிக நிறமூட்டிகளை பயன்படுத்தி உணவுப் பொருட்கள் தயார் செய்வது, தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களைப் பயன்படுத்துவது உள்ளிட்டவைகளை தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.

இதன் ஒரு பகுதியாக, இன்று (ஜூலை 25) பெரியகுளம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டதில் அதிக நிறமூட்டிகளை பயன்படுத்தி தயார் செய்து விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த 5 கிலோ இனிப்புப் பொருட்கள், காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 40 கிலோ அளவிலான உணவுப் பொருட்கள், மேலும் தடை செய்யப்பட்ட ஐந்து கிலோ நெகிழிப்பையை பறிமுதல் செய்ததாகத் தெரிவித்தார். மேலும், இது போன்ற செயலில் ஈடுபட்ட இனிப்பகம் மற்றும் மளிகை கடை உள்ளிட்ட பத்து கடைகளுக்கு 2000 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பெரியகுளம் பகுதியில் உள்ள 5 கடைகளில் இருந்து 10 கிலோகிராம் அளவில் கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது அப்பகுதியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, ஐஸ்கிரீம் கடையில் காலாவதியான ஐஸ் கிரீம்களும், பழக்கடை ஒன்றில் பளப்பளப்புகாக மெழுகு பூசப்பட்ட பழங்களும், அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப்பைகளும், பேக்கிரி ஒன்றில் அச்சடிக்கப்பட்ட நாளிதழில் கொண்டு தயாரிக்கப்பட்ட கேக்குகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்ததோடு சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Periyakulam: 10 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் - 5 கடைகள் மீது நடவடிக்கை

ABOUT THE AUTHOR

...view details