70 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம் தேனி:நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, வைகை அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகிறது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியுள்ளதால், அணையிலிருந்து உபரிநீர் திறப்பையொட்டி, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், தேனி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, 71 அடி உயரம் கொண்ட வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது. அணையின் நீர் மட்டம் 69 அடியை நெருங்கிய நிலையில், 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், தற்போது 70 அடியை எட்டியுள்ளதால், அணையிலிருந்து உபரிநீர் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
வைகை அணை மூலம் தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள் பயன்படுகிறது. மேலும், வைகை அணையானது ஆண்டிபட்டி, மதுரை ஆகிய நகரங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. மேற்குதொடர்ச்சிமலை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக வைகை அணைக்கு தற்போது வினாடிக்கு 2,693 கன அடிக்கும் மேலாக நீர் வரத்து உள்ளதால், அணையின் மொத்த உயரமான 71 அடியில் தற்போது 70 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளது.
அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியுள்ளதால், அணையிலிருந்து எந்த நேரத்திலும் உபரிநீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். அணைக்கு வரும் உபரி நீர் முழுவதும் 7 மதகுகள் வழியாக வெளியேற்றப்படும். ஏற்கனவே வைகை கரையோரமுள்ள தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, கரையோரம் உள்ள பாதுகாப்பை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு இறுதிகட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த சுற்றறிக்கை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபும் ஆகிய 5 மாவட்ட நிர்வாகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக வைகை அணையில்ருந்து இன்று உபரிநீர் வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளை பொதுப்பணித் துறையினர் செய்து வருகின்றனர்.
இதனையடுத்து, 70 அடியாக உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 70.50 அடியை எட்டியவுடன், அணைக்கு வரும் தண்ணீரை அப்படியே உபரியாக வெளியேற்ற பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளதால், ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு பொதுப்பணித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கோவில்பட்டியில் சுரங்கப்பாலத்தில் தேங்கிய மழை நீரில் சிக்கிய பேருந்து..! பயணிகளோடு பத்திரமாக மீட்பு!