தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தேவதானப்பட்டி அருகே உள்ளது மஞ்சளாறு அணை. தேனி, திண்டுக்கல் ஆகிய இரு மாவட்ட பாசன நிலங்களின் முக்கிய நீராதாரமாகத் திகழும் இந்த அணையின் மொத்த கொள்ளளவு 57அடியாகும்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான தலையாறு அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக நீர்வரத்தின்றி காணப்பட்ட மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த நவம்பர் ஆறாம் தேதி 51 அடியை எட்டியதால் முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நவம்பர் 17 அன்று 53 அடியாக அதிகரித்ததையடுத்து இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. நேற்று (நவ.19) முழுவதும் பெய்து வந்த கனமழையால் மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உயர்ந்தது.