தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெரியகுளம் அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மழைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 45 அடியில் இருந்து சிறிது சிறிதாக உயர்ந்தது. இன்று(ஜூலை 28) காலை நிலவரப்படி 50.70 அடியாக இருந்தது. இதனிடையே காலை நீர்வரத்து 140 கன அடியாக இருந்த நிலையில் மாலை 6 மணி அளவில் அணையின் நீர் மட்ட உயரமான 57 அடியில் 51 அடியாக உயர்ந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து பெரியகுளம் பொதுப்பணித்துறை அலுவலர்கள் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளனர். இதனால் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, வத்தலக்குண்டு உள்ளிட்ட மஞ்சளாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.