தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, தேவதானப்பட்டி அருகே அமைந்துள்ளது, மஞ்சளாறு அணை. 57 அடி உயரம் கொண்ட இந்த அணையில் கடந்த மாதம் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதால் 49 அடியாக குறைந்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக, வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக கொடைக்கானல் மலை உள்ளிட்ட நீர்ப்பிடிப்புப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து நேற்று(ஜனவரி 14) காலை 53.80 அடியாக உயர்ந்தது.
இதைத்தொடர்ந்து, பகல் முழுவதும் பெய்த மழையால் நீர் மட்டம் தற்போது 55 அடியை எட்டியுள்ளது. இதன் காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி மதகுகள் வழியாக உபரி நீர் முழுவதும் வெளியேற்றப்படுவதால் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, வத்தலக்குண்டு உள்ளிட்ட கரையோரப் பகுதி மக்களுக்கு இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்வு பொதுமக்கள் யாரும், குளிப்பதற்கோ, துணி துவைப்பதற்கோ, மஞ்சளாற்று பகுதிக்குச் செல்ல வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் அபாய ஒலி எழுப்பி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 55.00 அடியாகவும், மொத்த நீர் இருப்பு 435.32 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து 297 கன அடி நீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்படுகிறது.