தேனி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி வரை 43 நபர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களிில், போடியைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்தார். எஞ்சிய 42 பேர் கரோனா பாதிப்பிலிருந்து பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினர். இதனையடுத்து கரோனா பாதிப்பில் சிவப்பு நிற மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்த தேனி மாவட்டம், ஆரஞ்சு நிற மண்டலமாக மாறியது.
இந்நிலையில், கடந்த மே 2ஆம் தேதி போடி அரசு மருத்துவமனை அருகே இட்லி கடை நடத்திவந்த 51வயது பெண்ணுக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து தற்போது பெரியகுளத்தைச் சேர்ந்த கர்ப்பிணி, காஞ்சிபுரத்திலிருந்து உத்தமபாளையத்திற்கு வந்த ஒரு பெண், போடியைச் சேர்ந்த இருவர், சின்னமனூரைச் சேர்ந்த ஒருவர் என ஐந்து நபர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் கர்ப்பிணிப் பெண் உள்பட புதிதாக 5பேருக்கு கரோனா தொற்று உறுதி இவர்கள் அனைவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் தற்போது கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.
கரோனா நோய்த்தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் தேனி மாவட்ட மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.