தேனியில் முதன்முறையாக நடைபெற்ற வீட்டுத்தோட்டச் செடிகள் கண்காட்சி - ஏராளமானோர் வருகை! தேனி: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்பட்டு வருகிறது, பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி. இந்த கல்லூரியின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் சார்பில் தேனியில் வீட்டுத்தோட்ட செடிகள், பாரம்பரிய நெல் வகை, உரங்கள் ஆகியவற்றைப் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்த ஜூன் 23 முதல் 25ஆம் தேதி வரை மூன்று நாட்கள் கண்காட்சி தேனியில் முதன்முறையாக நடைபெற்று வருகிறது.
இன்றைய நவீன காலகட்டத்தில் இயற்கை உணவுகள் மீதான ஆர்வம் பொதுமக்களிடையே அதிகம் காணப்படுகிறது. பொதுமக்கள் தங்களது வீடுகளிடையே தோட்டம் அமைத்து தங்களுக்குத் தேவையான காய்கறிகளை, அவர்களே உற்பத்தி செய்து இயற்கை முறையில் வாழ வேண்டும் என்ற எண்ணம் இருந்து வருகிறது. காய்கறிகளில் பூச்சி மருந்து கலக்கப்படுவதால் உணவு விஷமாகும் அபாயம் இருப்பதால் தாங்களே விதை வாங்கி நல்ல முறையில் காய்கறிகளை உற்பத்தி செய்துகொள்ளும் ஆர்வம் மக்களிடையே காணப்படுகிறது.
இதற்காகவே, பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி சார்பில், தேனி நகரில் வீட்டுத்தோட்டச் செடிகள் அமைப்பது குறித்து கண்காட்சி மேளா 23ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த கண்காட்சியில் வீட்டில் தோட்டக்கலை அமைப்பது குறித்து வழிமுறைகள், மற்றும் பாரம்பரிய நெல் வகைகள், அரிய வகை செடிகள், விவசாயிகள் மூலம் விவசாயப் பொருட்களைக் கூட்டு மதிப்பீடு செய்து விற்கப்படும் பொருட்கள் ஆகியவை இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இதையும் படிங்க:மழைக்காலத்துக்கு ஏற்ற உணவுகள் எவை? - ஊட்டச்சத்து நிபுணர்கள் அட்வைஸ்!
இந்தக் கண்காட்சி என்பது காலையில் தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. மேலும் ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் மற்றும் வீட்டுக் காய்கறி தோட்டச் செடிகள், வீட்டு அழகுச் செடிகள் ஆகிய பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
மேலும், இது குறித்து பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கல்லூரி முதல்வர் ராஜாங்கம் கூறும் போது, ''தேனியில் நடைபெற்று வரும் இந்தக் கண்காட்சியானது பொதுமக்களிடையே இயற்கை முறையிலான உற்பத்தி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், இயற்கைச் செடிகள், விதைகள் ஆகியவை எங்கு வாங்குவது, எப்படி வாங்குவது, எங்கே கிடைக்கும் என்ற தகவல்கள் போன்ற அனைத்து விதமான ஐயத்தையும் போக்கும் வகையில் இந்தக் கண்காட்சியானது நடத்தப்பட்டு வருகிறது.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை வலியுறுத்தி வீட்டில் காய்கறித் தோட்டம், மூலிகைச் செடிகள் எனப் பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது தான் எங்களது நோக்கமாக இருக்கிறது. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வைத்து கூட்டு மதிப்பீடு செய்து விற்பனை செய்யப்படும் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் சார்பில் 56 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன'' என்றார்.
பின்னர் இது குறித்து தோட்டக்கலைத்துறை கல்லூரி தொழில் முனைவோர் மையத்தின் முதன்மை செயல் அலுவலர் வசந்தன் நம்மிடையே கூறும்போது, ''இந்தக் கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகள், 100க்கும் அதிகமான நாட்டு காய்கறிச் செடிகள், 50க்கும் மேற்பட்ட பழ வகைகள் குறித்து கண்காட்சி அமைத்துள்ளோம்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்தக் கண்காட்சிக்கு வருகை தருகின்றனர். மேலும் கண்காட்சிக்கு வருபவர்கள் அடுத்து எப்போது இந்த கண்காட்சி நடைபெறும் என எங்களிடம் கேட்கின்றனர். மேலும், நாங்கள் இந்தக் கண்காட்சியை ஆறு மாதத்திற்கு ஒரு முறை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்'' எனக் கூறினார்.
இதையும் படிங்க:Project K : ஆதிபுருஷ் உடன் இணையும் விஸ்வரூபம் - ‘புராஜெக்ட் கே’ படத்தில் இணைந்த கமல்ஹாசன்!