தேனி: ஆண்டிபட்டியில் தெப்பம்பட்டி சாலையில் உள்ள ஒன்றிய அதிமுக அலுவலகத்தில் அதிமுக மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றியங்களில் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆண்டிபட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜன் , கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன் , உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
வரும் 11ஆம் தேதி சென்னையில் நடைபெறும் அதிமுக பொதுகுழுவில் பங்கேற்பது குறித்தும் அதில் ஒற்றை தலைமைக்கு ஆதரவு அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது . கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களும் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். ஒருமித்த கருத்து முடிவு எடுக்கப்படாத நிலையில் கூட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.
இதையடுத்து ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் லோகிராஜன் அனைவரும் பொதுக்குழுவிற்கு சென்னை செல்வோம் யாரிடம் இரட்டை இலை இருக்கிறதோ அவர்களுக்கு ஆதரவளிப்போம் என்று கூறினார். அதைக் கேட்ட அனைவரும் கைகட்டி ஒரு மனதாக ஆதரவு தெரிவித்தனர் இரட்டைஇலை சின்னம் எங்கே இருக்கிறதோ அங்கு அனைவரும் ஆதரவு அளிப்பது என்றும் , தற்போது எடப்பாடிக்கு அதிக ஆதரவு இருப்பதால் அவருக்கு ஆதரவு அளிக்கலாம் என்றும் ஒன்றிய செயலாளர் லோகிராஜன் பேசினார்.