தேனி:தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அவரது 13 வயது மகளை பாலியல் ரீதியான தொந்தரவு செய்து பல முறை துன்புறுத்தியுள்ளார். இச்சம்பவத்தை சிறுமி தாயிடம் தெரிவித்த நிலையில், தாய் தனது கணவரிடம் பெற்ற மகளையே இப்படி செய்யலாமா என சண்டையிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அவர் நடந்த சம்பவங்களை வெளியில் தெரிவித்தால் சிறுமியையும், தாயையும் கொலை செய்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் தேனி மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், அவரது கணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கு விசாரணையானது தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட நபர், பெற்ற மகளையே பாலியல் ரீதியான தொந்தரவு செய்து துன்புறுத்தியும், அதனை வெளியே தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான வழக்கில் சாட்சியங்களின் அடிப்படையில் அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, அவருக்கு போக்சோ சட்டம் பிரிவு 6-இன் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் 5,000 ரூபாய் அபராதமும், போக்சோ சட்டம் பிரிவு 10-இன் கீழ் மேலும் ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் மற்றும் 2,000 ரூபாய் அபராதமும் விதித்து தேனி போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கணேசன் தீர்ப்பு வழங்கினார். இதனைத் தொடர்ந்து, அவர் மதுரை மத்திய சிறையில் அடைப்பதற்காக காவல் துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.
இதையும் படிங்க:ஜனநாயக விரோதம்.. நீதிமன்றம் குட்டியதும் நாடகம்.. ஆளுநரை கடுமையாக சாடிய முதலமைச்சர்!