தமிழ்நாடு

tamil nadu

கேரளா செல்ல அனுமதிக்க வேண்டும்: சோதனைச்சாவடி முற்றுகை

By

Published : Jun 13, 2020, 2:21 PM IST

தேனி: போடி மெட்டு வழியாகக் கேரளா செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என ஏலக்காய் விவசாயிகள் போடி முந்தலில் உள்ள சோதனைச்சாவடியை முற்றுகையிட்டனர்.

theni
theni

தமிழ்நாடு - கேரள எல்லையில் அமைந்துள்ளது தேனி மாவட்டம். கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் மூணாறு, ராஜாக்காடு, சாந்தாம்பாறை, கஜானாப்பாறை ஆகிய பகுதிகளில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஏலத்தோட்டங்கள் உள்ளன.

தற்போது நிலவிவரும் பொதுமுடக்கத்தால் தேனியிலிருந்து இடுக்கி மாவட்டத்திற்கு விவசாயிகள், தோட்டத் தொழிலாளர்கள் என எவரும் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2 மாதமாக நீடித்துவரும் ஊரடங்கால், ஏலக்காய் சாகுபடிப் பணிகள் தொய்வு ஏற்பட்டு விவசாயிகள் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால், தமிழ்நாடு விவசாயிகள் கேரளாவிற்குச் செல்ல செல்ல அனுமதிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கைவிடுத்தனர்.

அதன்படி இடுக்கி மாவட்ட ஆட்சியர் தினேஷனிடம், தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்பு, முதற்கட்டமாக 437 விவசாயிகளுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டு, கேரளா சென்றுவர அனுமதியளிக்கப்பட்டது. குறிப்பாக, குமுளி வழியாக கேரளா செல்ல வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், போடிமெட்டு மலைப்பாதை வழியாகச் சென்றுவர அனுமதிக்க வேண்டும் என ஏலக்காய் விவசாயிகள் இன்று முந்தலில் உள்ள காவல் துறை சோதனைச் சாவடியை முற்றுகையிட்டனர்.

தேனி மாவட்டம் போடி, ராசிங்காபுரம், தேவாரம், கோம்பை, உள்ளிட்ட பகுதிகளிலிருந்து குமுளி வழியாக தங்களது ஏலத்தோட்டங்களுக்குச் செல்ல வேண்டுமெனில் சுமார் 150 கி.மீ தூரம் சுற்றிவர வேண்டும். போடி மெட்டு வழியாகச் சென்றால் மட்டுமே குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கேரளா சென்று திரும்ப முடியும் என ஏலக்காய் விவசாயிகள் கூறினர்.

கேரளா செல்ல அனுமதி தேவை

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்துக்குமார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கையை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றார். ஏலக்காய் விவசாயிகள் கேரளா சென்றுவருவதற்கு ஓரிரு நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து விவசாயிகள் கலைந்துசென்றனர்.

இதையும் படிங்க:நீதிமன்றங்கள் திறந்தால் மட்டுமே பிரச்னை தீரும் - பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ்

ABOUT THE AUTHOR

...view details