தேனி: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி, காமாட்சி அம்மன் கோயில், மஞ்சளாறு, சில்வார்பட்டி உள்ளிட்ட பகுதியில் சுமார் 300 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் விவசாயிகள் பொங்கல் பண்டிகை விற்பனைக்காகப் பன்னீர் கரும்பு சாகுபடி செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு பொங்கல் சிறப்புத் தொகுப்பில் தமிழக அரசு ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு முழு கரும்பு வழங்க உத்தரவிட்டதோடு விவசாயிகளிடம் இருந்து ஒரு கரும்பு ரூ.33-க்கு விலை நிர்ணயிக்கப்பட்டு கொள்முதல் செய்ய உத்தரவிட்டது. இதனால், பொங்கல் கரும்பு விளைவித்த விவசாயிகளுக்கு 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு கரும்பின் விலை ரூபாய் 350 முதல் 370 வரை விலை ஏற்றம் கண்டது.
இந்த நிலையில், தமிழக அரசு இந்த ஆண்டும் பொங்கல் சிறப்புத் தொகுப்பில் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு முழு கரும்பு வழங்க உத்தரவிட்டதால் மகிழ்ச்சி அடைந்தனர். இத்தோடு, ஒரு கரும்பின் விலையைக் கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட விலையில் இருந்து ரூபாய் 5 உயர்த்தி ரூபாய் 38க்கு தமிழக அரசு கொள்முதல் செய்யும் என பன்னீர் கரும்பு பயிரிட்ட விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர்.