தேனி மாவட்டம் தேவாரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 30 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை சாக்கலூத்து மெட்டு சாலை அமைப்பதாகும். கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் நெடுங்கண்டம், உடும்பஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டுமானால் தேவாரத்திலிருந்து கம்பம்மெட்டு சாலை வழியாக 50 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும்.
அதே சமயம் தேவாரம் அருகே உள்ள டி.மீனாட்சிபுரத்திலிருந்து சாக்கலூத்து மெட்டு வழியாக அமைத்தால் 25 கிலோ மீட்டர் தூரத்தில் நெடுங்கண்டம், உடும்பஞ்சோலை சென்றுவிடலாம். ஏலத்தோட்டங்களுக்குச் சென்றுவரும் விவசாயிகளுக்கு இந்த வழித்தடம் பயன் தரும் வகையில் உள்ளதால், இவ்வழியில் சாலையமைத்து தர விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.