தேனிமாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையின் பாசன பகுதிகளான கைலாசபட்டி, லட்சுமிபுரம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 2 ஆயிரத்து 865 ஏக்கரில் முதல் போக சாகுபடி துவங்கியது. அதற்காக தமிழ்நாடு அரசு உத்தரவின் பேரில் சுமார் 30 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தொடர்ந்து இன்று முதல் 45 நாட்களுக்கு விநாடிக்கு 30 கன அடியும், அடுத்த 31 நாட்களுக்கு 27 கன அடியும், அதைஅடுத்த 60 நாட்களுக்கு 25 கன அடியும் நீர் வரத்தைப் பொறுத்து, தேவைக்கேற்ப 136 நாட்களுக்கு நீர் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நீர் திறப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சஜீவனா மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்று நீரை திறந்து வைத்து மலர் தூவி வரவேற்றனர்.
மேலும் அணையின் நீர்வரத்து மற்றும் நீர் இருப்பை கொண்டு முறையான பாசன அடிப்படையில் நீர் பங்கிட்டு வழங்கப்படும் என பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆண்டுதோறும் பாசனத்திற்கு 152 நாட்கள் நீர் திறந்து விடப்பட்டு வந்து நிலையில், இந்த ஆண்டு மட்டும் 136 நாட்களாக குறைத்துள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
இதனால் கடைமடை பகுதியில் உள்ள விவசாயிகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக விவசாயி குமரன் கூறுகையில், "தேனியைச் சுற்றியுள்ள நிலங்கள் இந்த சோத்துப்பாறை அணையின் நீரை நம்பி உள்ளது. கடந்த ஆண்டு 152 நாள் தண்ணீர் திறக்கப்பட்டது.