முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் சாலை மறியல்.. தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இரண்டாம் பூர்வீக பாசனப்பகுதி விவசாய நிலங்களுக்காக வினாடிக்கு 1200கன அடி வீதம் இன்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் 4 நாட்களுக்கு 413 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 8119 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் வைகை ஆற்றங்கரை ஓரம் உள்ள நூற்றுக்கணக்கான கண்மாய்கள், குடிநீர் ஆதாரங்கள் நிரம்புகின்றன. ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தேனி ,மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய நான்கு மாவட்டங்களில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக வைகை ஆற்றில் யாரும் குளிப்பதற்காக இறங்கவோ வைகை ஆற்றைக் கடப்பதற்கு முயலவோ வேண்டாம் என வைகை பொதுப்பணித்துறையானர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 65.16 அடியாகவும் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1796கன அடியாகவும் அணையில் நீர் இருப்பு 4666 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.
இதனிடையே தேனி மாவட்டம் மதுரை தேசிய நெடுஞ்சாலைகள் உள்ள பங்களா மேடு என்ற இடத்தில் உத்தாமபாளையம் முல்லைப் பெரியார் ஆற்றில் இருந்து தண்ணீர் 18ம் கால்வாய் மற்றும் பி டி ஆர் கால்வாயில், தந்தை பெரியார் கால்வாய் மூலமாகத் தண்ணீர் திறக்க கோரி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் இன்று (டிச 11) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் ஒன்று கூடிய இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் முடித்த பின் விவசாயிகள் அனைவரும் பங்களா வீட்டில் இருந்து தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகம் வரை ஊர்வலமாகச் சென்றனர். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் விவசாயிகளைத் தடுத்து நிறுத்தி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்தனர்.
இதன் காரணமாக விவசாயிகள் அனைவரும் சாலையில் படுத்தும் அமர்ந்தும் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலால் அரை மணி நேரத்திற்கு மேலாக இந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தமிழக அரசின் 2024 பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பாகக் கும்பகோணத்தில் விவசாயிகள் போராட்டம்..!