தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குழாய் வழியாக மதுரைக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு

தேனி: குழாய் வழியாக மதுரைக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தினால், தேனி மாவட்டம் வறண்ட பாலைவனமாக மாறிவிடும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தேனி
தேனி

By

Published : Sep 20, 2020, 3:32 AM IST

தேனி மாவட்டம் லோயர்கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரையிலான கம்பம் பள்ளத்தாக்கில் 14,707 ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளன.

இந்தப் பகுதிகளின் இருபோக நெல் சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்தாண்டு சரிவர பெய்யாத கோடை மழையினால் அணையின் நீர் மட்டம் உயராததால் ஜூன் மாதம் திறக்க வேண்டிய தண்ணீர் ஆகஸ்ட் 13ஆம் தேதி திறக்கப்பட்டது.

அதன்படி 120 நாள்களுக்குப் பிறகு 200 கன அடி நீர் முதல் போக சாகுபடிக்கும், 100 கன அடி நீர் குடிநீர்த் தேவைக்கும் திறக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால் அரசாணைப்படி முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கவில்லை என கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக உத்தமபாளையத்தில் நேற்று (செப்.19) கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை குறைத்து இரண்டாம் போக சாகுபடிக்குத் தேவையான தண்ணீர் இருப்பை உறுதி செய்ய வேண்டும், உயர் நீதிமன்ற ஆணைப்படி குடிமராமத்துப் பணிகளை முன்பிருந்த நடைமுறைப்படி விவசாயச் சங்கங்களுக்கு வழங்க வேண்டும், முல்லைப் பெரியாற்றிலிருந்து மதுரைக்கு குழாய் வழியாகத் தண்ணீர் கொண்டு செல்லும் கூட்டுக் குடிநீர் திட்டத்தைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுகுறித்து கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் கூறுகையில், "குழாய் வழியாக மதுரைக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தினால், தேனி மாவட்டம் வறண்ட பாலைவனமாக மாறிவிடும். இத்திட்டத்திற்காகச் செலவிடும் தொகையின் மூலம் வைகை அணையைத் தூர்வாரி கூடுதலாகத் தண்ணீர் சேமித்து மதுரை கூட்டுக் குடிநீர் திட்டத்தைச் செயல்படுத்தலாம்.

எனவே கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகளின் எதிர்ப்பை மீறி இந்த திட்டத்தை செயல்படுத்தினால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details