தேனி: தேனி மாவட்டத்தின் தமிழக எல்லை, கூடலூர் மேற்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட தமிழக வனப்பகுதியான சுரங்கனாறு, காப்புக்காடு, ஆசாரிபள்ளம் பகுதியில் கூடலூர் பகுதியைச் சேர்ந்த சிலர் தலைமுறை தலைமுறையாக தங்கி, ஏலக்காய், மிளகு உள்ளிட்ட விவசாயம் செய்து வந்துள்ளனர்.
கடந்த 1993ல் வனப்பகுதியிலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டபோது இங்கு விவசாயம் செய்த ஏராளமான விவசாயிகள் வனப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். வனப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட சிலர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். மேலும், வன உரிமையை அங்கீகரித்தல் 2006 சட்டத்தின்கீழ், பாரம்பரியவாசிகள் சுய சாகுபடி செய்ய வன நிலத்தை வைத்திருக்க உரிமைகோரி, வனத்துறையினருக்கு மனு கொடுத்தனர்.
இதற்குப் பதிலளித்த வன அதிகாரி சமர்தா பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் பாரம்பரிய வனவாசிகள் சட்டம் 2006ன் படி விண்ணப்பம் பரிசீலனைக்காக கிராமசபைக் கூட்டம் கூட்டி அல்லது வனக்குழு ஏற்பாடு செய்து அதன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என்றனர்.
இதையும் படிங்க:கர்நாடகாவில் ஆளும் கட்சியைப் பொறுத்து மேகதாது விவகாரம் பார்க்கப்படுகிறது - தெலங்கானா ஆளுநர் தமிழிசை சாடல்
இந்நிலையில், இந்த வழக்கில் 18 குடும்பங்களுக்குச் சாதகமாக உத்தரவு வந்துள்ளதாகவும் தங்கள் நிலத்தை ஒப்படைக்கக் கோரி, பெண்கள் உட்பட சுமார் 18 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வனப்பகுதிக்குள் சென்று டென்ட் அமைத்து குடியேறி உணவு சமைத்துக் கொண்டு, தங்கள் நிலத்தை ஒப்படைக்கக்கோரி போராட்டம் நடத்தினர்.