தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி அருகேயுள்ள ஒத்தப்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (36). இவருக்கு ராஜேஸ்வரி (32) என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். தற்போது மணிகண்டன் அவரது மனைவி குழந்தைகளுடன் ராயப்பன்பட்டி சண்முகாநதி அணை அருகேயுள்ள ஆலமரம் பகுதியில் வசித்து வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு மணிகண்டனும் ராஜேஸ்வரியின் தம்பி பாண்டீஸ்வரனும் ஒன்று சேர்ந்து ஆனைமலையன்பட்டி பகுதியில் டீக்கடை வைத்து நடத்தினர். அதில் இருவருக்கும் நஷ்டம் வரவே தனியாக பிரிந்து வாழை இலை அறுக்கும் கூலி வேலைக்குச் செல்லத் தொடங்கினர்.
இந்நிலையில் இன்று காலை மணிகண்டன், அவரது மனைவி இருவரும் இரு சக்கர வாகனத்தில், வாழை இலை அறுக்கும் பணிக்காக வீட்டிலிருந்து கிளம்பியுள்ளனர். அப்போது பாண்டீஸ்வரன் (30), அவரது மனைவி நிரஞ்சனா (24) அங்கு எதிரே வந்தபோது இரு குடும்பத்தினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் பாண்டீஸ்வரன், நிரஞ்சனா ஆகியோர் மறைத்து வைத்திருந்த அரிவாள் மற்றும் கத்தியைக் கொண்டு மணிகண்டனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனைத் தடுக்க வந்த மணிகண்டன் மனைவி ராஜேஸ்வரிக்கும் கையில் வெட்டுக்காயம் விழுந்துள்ளது. காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருவரையும் தாக்கிவிட்டு அங்கிருந்து பாண்டீஸ்வரன், அவரது மனைவி நிரஞ்சனா ஆகிய இருவரும் தப்பியோடினர்.