திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பகுதியில் வசித்து வருபவர் விஜய்(24). இவர் தனது சகோதரி துர்கா மற்றும் அவரது இருகுழந்தைகளான தர்ஷன், தருண் ஆகியோருடன் நேற்றிரவு (நவ.23), பெரியகுளம் - வத்தலக்குண்டு சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அவர்கள் தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகேவுள்ள மீனாட்சிபுரம் பகுதியில் சென்று கொண்டிருக்கையில், பின் திசையில் வத்தலக்குண்டு நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த அட்டணம்பட்டியைச் சேர்ந்த கருத்தபாண்டி(24) என்பவர் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த கருத்தபாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனிடையே அதே திசையில் காரில் வந்து கொண்டிருந்த ரெட்டியார்சத்திரத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பரும் கருத்தபாண்டியின் வாகனத்தின்மீது மோதி விபத்து ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. காயமடைந்த விஜய், அவரது சகோதரி துர்கா மற்றும் இரு குழந்தைகளும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இது தொடர்பாக விஜய் அளித்தப் புகாரின் அடிப்படையில் தேவதானப்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.