தேனி மாவட்டம் போடி திருமலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் முரளிதரன், நந்தகுமார். சகோதரர்களான இவர்கள் தேனியில் தனியார் கேபிள் டிவி சேனல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இவர்களது அலுவலகத்திற்கான மின்சார கட்டணம் செலுத்தாமல் இருந்ததற்காக மின்சார ஊழியர் அழகர்சாமி என்பவர் மின் இணைப்பை துண்டிக்கச் சென்றுள்ளார். அப்போது அலுவலகத்தில் இருந்த முரளிதரன், நந்தகுமார் ஆகிய இருவரும் மின்சார ஊழியர் அழகர்சாமியை அரசுப்பணி செய்யவிடாமல் தடுத்ததோடு மட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது.
மேலும், தனியார் தொலைக்காட்சியின் நிருபர்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டு, அலுவலகத்தின் மின் இணைப்பை துண்டித்தால் டிவியில் செய்தி வெளியிட்டுவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அழகர்சாமி தனது உயர் அலுவலர்களுக்கு தகவல் அளித்துவிட்டு அங்கிருந்து வந்து விட்டார். பின்னர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.