கர்நாடக மாநிலம் பெங்களுரைச் சேர்ந்தவர் செல்வம். இவர் தேனி மாவட்டத்தில் வெள்ளைப்பூண்டு வியாபாரம் செய்துவிட்டு மீண்டும் பெங்களூரை நோக்கி தனது வாகனத்தில் புறப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சரக்கு வாகனம் திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எண்டப்புளி பகுதியில் சென்று கொண்டிருக்கையில், 3 பேர் கொண்ட கும்பல் வாகனத்தை வழிமறித்துள்ளனர்.
அவர்கள் ஓட்டுனரிடம் நாங்கள் காவலர்கள் என்றும், வாகனத்தில் நீங்கள் கஞ்சா கடத்துவதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே உடனடியாக சோதனை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனர். மேலும், செல்வம் வைத்திருந்த ரூ. 8 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை திடீரென்று அபகரித்து ஓட முயற்சி செய்துள்ளனர்.
இதைப் பார்த்த செல்வம் சுதாரித்து, கூச்சலிடவே அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து மூவரையும் மடக்கிப் பிடித்தனர். இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை மூவரிடமும் விசாரணை நடத்தினர்.
அதில், 12 ஆண்டுகளுக்கு முன்பு பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி ஓய்வு பெற்ற கிருஷ்ணன் மற்றும் அவரின் உறவினர்கள் வேல்மணி, அருண்குமார் ஆகியோருடன் இணைந்து போலி காவலர்களைபோல் ஏமாற்றி வழப்பறியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் மூவரையும் காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பொங்கல் விடுமுறையை பயன்படுத்தி 17 சவரன் நகை திருட்டு! - அதிர்ச்சியில் மருத்துவர் குடும்பம்