தேனி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று தேனியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கர்நாடகாவில் தமிழக மக்களுக்கு விரோதமாக மேகதாது அணை கட்டப்படுவதற்கு முயற்சிகள் நடந்து வருகின்றன. அந்த அணை கட்டுவதற்கான மணல் சப்ளை செய்வது தேனியில் ஆளும் கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமார்தான். இதை அறிந்து டெல்டா பகுதி விவசாயிகளும் கொதித்துப் போயுள்ளனர்.
'மேகதாதுவில் அணை கட்டும் பணிக்கு ஓபிஎஸ் மகன்தான் மணல் சப்ளை' - ஈவிகேஎஸ் இளங்கோவன் புகார் - ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்
தேனி: காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு கட்ட இருக்கும் மேகதாது அணைக்கு மணல் சப்ளை செய்வது ஓபிஎஸ் மகன்தான் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கர்நாடகாவிற்கு மணல் சப்ளை செய்து கொள்ளை லாபம் சம்பாதித்து மக்களுக்கு துரோகம் செய்ய எப்படி இவர்களுக்கு மனம் வருகிறது. பணம் வந்தால் போதும் என்று இருக்கிறார்கள். இவர்களுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். பிரதமரின் தேனி பொதுக்கூட்டத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்களில் தலா ஆயிரம் ரூபாய் கொடுத்து கூப்பிட்டு வந்துள்ளனர். இருந்த போதிலும் கூட்டம் கூடவில்லை. இதெல்லாம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தான் விசாரிக்க வேண்டும். என்னைப் பற்றி பேசிய மோடி வெளியூர்களில் இருந்து ஆட்களை கொண்டு வந்திருப்பதாக கூறுகிறார். அவர் உத்தரப்பிரதேசத்தில் போட்டியிடலாமா, குஜராத்தில் இருந்து இங்கு வந்து ஓட்டு கேட்கலாமா..? இதெல்லாம் இந்திய ஒருமைப்பாட்டை, ஒற்றுமையை சீர்குலைக்கும் செயல், என்றார்.
மேகதாது அணைக்கு ஓபிஎஸ் மகன் மணல் சப்ளை செய்வதாக சொல்வதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, இது தொடர்பாக வார இதழ்களில் எழுதி இருக்கிறார்கள். என் மீது வழக்கு போடட்டும், ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறேன், என்றார். மேகதாது அணை கட்டப்படும் என ராகுல் காந்தி கர்நாடகாவில் பேசியது குறித்து கேட்டப்போது, காங்கிரஸ் தேசிய தலைவராக இருக்கக் கூடியவர் இரு மாநில பிரச்னைகளில் அப்படி பேச வாய்ப்பு இல்லை. நீங்கள் ஆதாரம் கொடுத்தால் அதற்கு நான் மன்னிப்பு கேட்கத் தயார், என்றார்.