தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் ஒற்றை காட்டு யானையின் நடமாட்டம் இருந்துவருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் இரண்டு வாரங்களில் இந்த ஒற்றை யானையின் தாக்குதலால் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.
இதன் காரணமாக இந்த ஆண்டும் காட்டுயானை- மனித மோதலை தவிர்ப்பதற்கு இரவு நேரங்களில் விளை நிலங்களுக்கு விவசாயிகள் சென்றுவர, ஆடு, மாடு கிடைகள் அமைப்பதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
மேலும் ஒலிப்பெருக்கி மூலம் தோட்டப்பகுதிகளுக்கு நேரடியாக சென்று வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.
இந்நிலையில் வருசநாடு அருகே பொன்னன்படுகையைச் சேர்ந்த ராஜாங்கம், டி.மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த முனியாண்டி ஆகிய இருவர் தேவாரம் சாக்கலூத்து மெட்டு வழியாக தடை செய்யப்பட்ட வனப்பாதையில் கேரளாவிற்கு நடந்து சென்றுள்ளனர்.
அவர்கள் கேரள எல்லைக்கு மிக அருகாமையில் சென்று கொண்டிருந்தபோது வனத்தில் சுற்றத்திரிந்த காட்டுயானை இருவரையும் தாக்குவதற்கு துரத்தியுள்ளது. இதில் தப்பித்து ஓடிய முனியாண்டி கேரள வனத்துறையினரிடம் மாட்டிக்கொண்டார்.
மற்றொரு திசையில் ஓடிய ராஜாங்கம் பள்ளத்தில் விழுந்து சிக்கிக்கொண்டார். இதனால் யானையின் தாக்குதலில் இருந்து உயிர் தப்பித்தார். இதனையடுத்து கேரள வனத்துறையினர் முனியாண்டியிடம் விசாரணை நடத்தி பின்னர் பள்ளத்தில் சிக்கியிருந்த ராஜாங்கத்தையும் உயிருடன் மீட்டனர். அதன் பிறகு இருவரையும் எச்சரித்து தமிழ்நாடு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து கோம்பையில் உள்ள உத்தமபாளையம் வனச்சரக அலுவலகத்திற்கு வனத்துறையினர் இருவரையும் அழைத்து வந்து தடை செய்யப்பட்ட வனப்பதையில் நடந்து செல்லக்கூடாது என எச்சரித்தனர்.
இந்தச் சம்பவத்தைத்தொடர்ந்து தடை செய்யப்பட்ட வனப்பகுதியில் பொதுமக்களின் நடமாட்டத்தை தவிர்ப்பதற்காக வனத்துறையின் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க...ரயில் பாதைக்காக வெடி வைத்ததில் கோயில் காவலாளி உயிரிழப்பு