தேனி: யானை தாக்கி தொழிலாளி உயிரிழந்ததை கண்டித்து வனக்காப்பாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் பேரூராட்சிக்குட்பட்ட மணலார் பகுதியில் நேற்றிரவு காட்டு யானை ஒன்று நடமாடியுள்ளது. குடியிருப்பு பகுதிகளை சேதப்படுத்திய காட்டு யானை, வீட்டு வாசலில் இருந்த முத்தையா என்ற தொழிலாளியை தாக்கியுள்ளது.
இதில், வீட்டு வாசலில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இதேபோல டிசம்பர் 15ஆம் தேதி விறகு சேகரிக்கச் சென்ற முதியவரையும் காட்டு யானை தாக்கிக் கொன்றது. இச்சூழலில் சம்பவ இடத்தை மேகமலை வன உயிரின சரணாலயக் காப்பாளர் சச்சின் துக்காராம் போஸ்லே இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
இதனையறிந்த அப்பகுதியினர் திடீரென வனக் காப்பாளரை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பொது மக்களையும், தொழிலாளர்களையும் அச்சுறுத்தி வரும் யானையைப் பிடிக்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
யானை தாக்கி இருவர் உயிரிழப்பு: வன அலுவலரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் இன்னும் ஓரிரு வாரத்திற்குள் யானை பிடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினர் தெரிவித்ததையடுத்து பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர். வனத் துறையினர் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம் என பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.