தேனி: போடிநாயக்கனூர் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது அரசு நிதி உதவி பெறும் ஆரம்பப் பள்ளி. இந்த ஆரம்பப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியில் சுமார் 4 ஆயிரத்திற்கு மேல் மாணவர்கள் பயின்று வருகின்றனர். சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த அரசு நிதி உதவி பெறும் பள்ளியின் தொடக்கப் பள்ளி நகரின் காய்கறி மார்க்கெட் அருகில் அமைந்துள்ளது.
அதில், எல்கேஜி, யுகேஜி முதல் 5 ஆம் வகுப்பு வரை சுமார் 200 சிறுவர், சிறுமிகள் இந்த பள்ளி வளாகத்தில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளி நுழைவு வாயில் முன்புறமே இப்பகுதி குடியிருப்பு வாசிகள் கொட்டும் குப்பைகள், காய்கறி மார்க்கெட்டில் அழுகி வீணாகும் காய்கறிகள் மற்றும் இறைச்சி கழிவுகள் மொத்தமாக இங்கு கொட்டப்படுவதாக கூறப்படுகிறது.
இதானால் அந்த குப்பைகள் அழுகி அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு மற்றும் ஈக்கள் உற்பத்தியாகி வருகிறது. இதனால் இந்த பள்ளி வளாகத்தில் பயிலும் மழலை குழந்தைகள் காலரா, மலேரியா மற்றும் சுவாசக் கோளாறுகள் போன்ற நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
அரசு நிதி உதவி பெறும் நிர்வாகம் சார்ந்த பள்ளி என்பதால் இங்கு முன்புறம் கொட்டப்படும் குப்பைகள் குறித்து பல முறை புகார் அளித்தும் போடி நகராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்று பெற்றோர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இப்பள்ளி அருகிலேயே 200 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த சுப்பிரமணியர் கோயில் அமைந்துள்ளது.