கட்சியினரை உற்சாகப்படுத்திய ஈபிஎஸ் தேனி மாவட்டம்போடி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராமராஜ் இல்ல திருமண விழாவிற்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு தேனி அன்னஞ்சி விளக்கு பகுதியில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்வி உதயகுமார், கடம்பூர் ராஜு உள்ளிட்ட முக்கிய அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர் .
இடைக்கால பொதுச்செயலாளராக அதிமுக நிர்வாகிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் தேனி மாவட்டத்திற்கு முதல் முறையாக வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு பூரண கும்பம் மரியாதை உடன் மலர்கள் தூவியும், செண்டைமேளம், தப்பாட்டம், டிரம் செட், கரகாட்டம்,தேவராட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், சண்டி மேளம் முழங்கி ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.
வரவேற்பு நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்த மேடையில் ஏறிய எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெள்ளிவால் கொடுத்து வரவேற்றார். செல்லூர் ராஜு மற்றும் தேனி மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதனை அடுத்து வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கனவை நினைவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். நமது வழி தனி வழி. தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த எனக்கு வரவேற்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றி” என்றார். இதையடுத்து அங்கிருந்து கம்பத்தில் நடைபெறும் கல்யாண நிகழ்வில் கலந்து கொள்வதற்கு புறப்பட்டு சென்றார்.
இதையும் படிங்க: குஜராத் மாநில பொங்கல் விழாவில் ஓபிஎஸ் பங்கேற்பு