தேனிபெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி நேரில் வந்து ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவியின் முதலாமாண்டு நினைவு அஞ்சலி அனுசரிப்பை ஒட்டி, அவரது திருவுருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, “எடப்பாடி பழனிசாமி ஒருபோதும் அதிமுகவின் மன்னனாக மகுடம் சூட முடியாது. ஐந்தரை அறிவுள்ள எடப்பாடி பழனிசாமி உடன் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவரைத் தவறாக வழிநடத்திச்செல்கிறார்கள். அதிமுக கட்சி, மற்றும் இரட்டை இலைச் சின்னம் முடங்குகிறது என்றால் அதற்குக் காரணம் அரசியல் பச்சோந்தி கே.பி. முனுசாமி தான் காரணம். எடப்பாடி பழனிசாமியை அரசியல் ரீதியாக முடிவு கட்டும் வேலையை செய்துவருகிறார், கே.பி. முனுசாமி.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப்பின் வி.கே.சசிகலா தவறுதலாக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்ததுதான் இப்போதைய அரசியல் மாற்றத்திற்குக் காரணம். அவர் இதை பலமுறை என்னிடம் கூறி வருத்தப்பட்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி ஜெயிலுக்கு போவது உறுதி. அவருடன் உள்ள முன்னாள் அமைச்சர்களும் சிறை செல்வார்கள். அதற்குக்காரணம் இந்தியாவில் நடைபெற்ற ஊழலுக்கு எல்லாம் மிகப்பெரிய ஊழல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆட்சியில் நடைபெற்றுள்ளது.