தேனி மாவட்டம் போடி சுப்புராஜ்நகர் புதுக்காலனியைச் சேர்ந்த தம்பதியினர் ரத்தினசாமி – நாகலட்சுமி (54). இந்த தம்பதிக்கு அழகுராஜா, ரெங்கராஜ் (34) என்ற இரு மகன்களும், திருமணமான ஒரு மகளும் உள்ளனர். இதில், ரெங்கராஜ் மாற்றுத்திறனாளி ஆவார்.
போடியில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்திவந்த ரத்தினசாமிக்கு உடல் நலக்குறைவால் கை, கால்கள் செயலிழந்து தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதன் காரணமாக போதிய வருமானமின்றி ரத்தினசாமியின் குடும்பம் வறுமையால் தவித்துவந்துள்ளது. இதனால் விரத்தியடைந்த நாகலட்சுமி, மாற்றுத்திறனாளியான தனது மகன் ரெங்கராஜூடன் சேர்ந்து விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
நீண்ட நேரமாகியும் அவர்களின் வீட்டு கதவு திறக்காததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்துபோது, தாயும், மகனும் இறந்துகிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போடி நகர் காவல் துறையினர், உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். வறுமையின் காரணமாக தாய், மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:வறுமையால் சிறுவன் போல வேடமிட்டு சுக்கு காபி விற்ற சிறுமி!